அபகரித்த விவசாய காணியை மீள பெற நீதி கேட்க சென்ற மக்களை தாக்கிய பொலிஸார்
திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விவசாய பூமியே முத்து நகர் கிராமமாகும். இங்கு வாழும் மக்களின் ஜீவனோபாய தொழிலாக நெற் செய்கை விவசாயம்,மேட்டு நிலப் பயிர் செய்கை காணப்படுகிறது.
எது எவ்வாறாக இருந்தாலும் அண்மைக்காலமாக இம் மக்களது விவசாய பகுதியை தனியார் துறை இரு கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை வழங்கியுள்ளதுடன் 800 ஏக்கர் நிலப் பரப்பை கையகப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணி என கூறி நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக 22 விவசாயிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் மக்கள் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காணி அபகரிப்பு
இந்த நிலையில் 29.07.2025 அன்று திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற போது குறித்த பகுதி விவசாயிகள் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் .காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணியை தாண்டியும் தங்களுடைய விவசாய செய்கை காணியை மீள தருமாறு வலியுறுத்தி கூட்டம் முடியும் வரை போராடினர்.
அங்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரவை சந்திக்க முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை . இதனால் குறித்த அரசியல்வாதிகள் பாதுகாப்புடன் வெளியேறினர் நீதி நியாயம் கேட்ட போது பல அப்பாவி விவசாயிகள் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் விவசாயியான கே.உவைஸ் என்பவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் " எனக்கு முத்து நகர் பகுதியில் காணி உண்டு எனது காணியும் பறிபோனது இதனால் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்திக்க சென்றேன்.
இந்த நிலையில் பிரதான நுழைவாயிலை பொலிஸார் மூடியிருந்து உட் செல்ல விடாது தடுத்தனர். இதன் போது நீதி கேட்டு போராடினோம்.பொலிஸார் என்னை தாக்கி விட்டு தூக்கி இழுத்து வீசிய நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது அடிபட்டு உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டி மூலம் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.
இதன் போது ஐந்து நிமிடம் மூச்சு நின்று பெரும் கஷ்டத்தை இந்த தாக்குதல் மூலமாக அனுபவித்தேன். தற்போது வீடு திரும்பினாலும் நடக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்த அவர் இது போன்ற தாக்குதல்களை பொலிஸார் இனி நடத்தக் கூடாது எம் காணி உரிமைகளை பெறவே போராடினோம்" என்றார்.
அப்பாவி விவசாயிகள் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள பெற்று தங்கள் வாழ்வாதார தொழிலான நெற் செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அங்கு சென்றிருந்தனர். ஆனாலும் பொலிஸார் அராஜகம் அவர்களை விட்டு வைக்கவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த தாக்குதலுக்கு உள்ளான விவசாயியை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நிலாவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று நலன் விசாரித்ததன் பின் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அரசாங்கம்
" மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முத்துநகர் காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட அமைதி போராட்டத்தில் அவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட தாக்குதல் கண்டிக்கதக்கது.
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என கூறிய இந்த அரசாங்கம் தற்போது அந்த விவசாயிகளை எதிர்கொள்ள முடியாமல் பொலிஸாரை கொண்டு அவர்களை விரட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முத்து நகர் மக்களின் விவசாய காணிகளில் பல வருடங்களாக விவசாய பயிர் செய்கை செய்துள்ளனர்.
ஆனால் தற்போது இந்த அரசாங்கம் காணிகளை சூரையாடியுள்ள வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அந்த அடிப்படையில் அரசாங்கத்தை நம்பிய இந்த முத்து நகர் மக்களை ஏமாற்றியுள்ளனர்.குறிப்பாக சென்ற ஜனாதிபதி தேர்தலில் பகிரங்கமாக மேடைகளில் சொன்ன விடயம் தான் முத்து நகர் மக்களை எழுப்பப் போவது கிடையாது அந்த மக்கள் நிம்மதியாக பயிர், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கூறி விட்டு ஆட்சியமைத்ததன் பின் தற்போது பழி வாங்கப்பட்டு நீதி மன்ற வழக்குகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
தற்போது மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது .1972 ஆம் ஆண்டு முதல் இந்த மக்கள் இங்கு விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றார்கள் . ஆனால் எந்த விதியும் இன்றி வெளியேறச் சொன்னால் எங்கே போவார்கள். அரசாங்கம் சற்று இதனை சிந்திக்க வேண்டும் .இந்த அரசாங்கம் தான் சொன்னார்கள் சென்ற காலங்களில் மக்களை இனி வீதியில் இறக்கமாட்டோம் ஆர்ப்பாட்டம் செய்ய நாட்டில் இடமளியோம் மக்களுக்கான அரசாங்கம் என கூறி வேறு வெளிநாட்டு கம்பனிகளினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் (IMF) கோரிக்கைகளுக்குள் மாட்டி தத்தளித்து மக்களை துன்புறுத்துகின்றனர்.
இதனை விடுத்து அரசாங்கம் கருணை செய்து மக்களது காணிகளை வழங்க அரசாங்கமும் ஜனாதிபதியும் இவ் விடயத்தில் செயற்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக காணப்படுகிறது" என்றார்.
குறித்த பகுதி விவசாயிகள் தங்களுக்கு நீதி நியாயம் ஊடாக தங்கள் காணிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ரொசான் அக்மீமன இருவரும் அப் பகுதி மக்களுடன் காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்க முன் கலந்துரையாடி விட்டு எந்த கம்பனிகளுக்கும் வழங்கமாட்டோம் என வாக்குறுதி அளித்து விட்டு இலங்கை துறை முக அதிகார சபையினரின் மேற்பார்வையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பலத்த பாதுகாப்புடன் காணிகளை அளவீடு செய்து தற்போது இரு கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கியுள்ளனர். தற்போது அங்கு வேலைத் திட்டமும் இடம் பெற்று வருகின்றது .
வாக்குறுதி
ஆட்சி அதிகாரத்தை பெற முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கி ஏழை விவசாயிகளை தற்போது ஏமாற்றியுள்ளனர் . கடந்த காலங்களில் உள்ள அரசாங்கம் இதனை தனியாருக்கு ஒப்பந்தம் செய்து நீண்ட கால குத்தகைக்கு வழங்கியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உள்ள காணிகளை தவிர ஏனைய காணிகளை வழங்க முயற்சிப்பதாகவும் மாவட்ட செயலகம் முன் இடம் பெற்ற தாக்குதலுக்கு தங்கள் கண்டணத்தை தெரிவிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்துள்ளார்.
இது போன்று பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்திருப்பதாவது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கு கொள்ளாமல் அரசியல் பிண்ணனியை கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மக்களை வழிநடாத்தியுள்ளார் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் 2015 ம் ஆண்டு தொடக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிலும் தொடர்புள்ளவராக இருந்தவர் எனவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட அப்பாவி ஏழை விவசாயிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளனத்தின் தலைவி திருமதி சஹீலா சபருள்ளா தெரிவிக்கையில் "கடந்த 53 வருடங்களாக 800 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். 2023இல் குளம் புனரமைப்புக்காக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் ஒதுக்கப்பட்டு இலங்கை துறை முக அதிகார சபை என உரிமை கோரினர்.
இதனால் அபிவிருத்தி நிறுத்தப்பட்டது. இங்கு ஏக்கர் வரி செலுத்தி வந்தோம் பசளை பெற்று விவசாயம் செய்தே வந்தோம். ஜூலை கலவரத்தின் போது இராணுவம் ஆக்கிரமித்தது.1972 இல் மக்கள் மீள குடியேற்றப்பட்டனர். 1984இல் வர்த்தமானி அறிவித்தலை அப்போதைய துறை முக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி மூலமாக துறை முக அதிகார சபை காணி என அறிவிக்கப்பட்டது.
மகிந்த ஆட்சி காலத்தில் பல விவசாய உதவி திட்டங்களை மேற்கொண்டு உதவினார். ஆனால் அண்மை காலமாக துறை முக அதிகார சபையினர் வெளியேறுமாறு கூறி கூறி தற்போது அடாத்தாக கையகப்படுத்தி தனியார் கம்பனிகளுக்கு தாரை வார்த்துள்ளனர். இதனை மீள பெறவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நம்பினோம் தற்போது ஏமாற்றியுள்ளனர் அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர் ,எனவும் தேசிய மக்கள் சக்தி ஆளுங் கட்சி உறுப்பினர்கள் எங்களுக்கு உதவுவதாக வாக்குறுதியளித்தனர்.
சாதகமான தீர்வு
ஆரம்பத்தில் இவ்வாறு கூறி இவர்கள் முத்து நகர் கிராமத்துக்குள் வருகை தந்து சென்றனர். தற்போது வளங்களை சூரையாடி மணல்களை கூட இயந்திரம் மூலமாக ஏற்றுமதி செய்கின்றனர். விவசாய நிலம் தொடர்பில் பேசிய எங்கள் நால்வரை சீனக் குடா பொலிஸார் விசாரனை என கூறி சிறையில் அடைத்தனர் . இதை கேட்கவே மாவட்ட செயலகம் முன் ஒன்று கூடிய தருணம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது உரிய பிரதியமைச்சரை சந்திக்க விடாது பெண்கள் உட்பட ஏழை விவசாயிகளை தாக்கினர்.
பொலிஸ் உயரதிகாரி பெண் ஒருவரை இழுத்து வீசி தாக்கினார். இவ்வாறான தாக்குதல்களை ஏற்க முடியாது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்கள் வளங்களை வெளியார் சூரையாடுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
குறித்த விவசாயிகளின் காணி மீட்பு போராட்டங்களுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.
இந்த மக்களுக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் விவசாய பூமி அவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே தான் அப்பாவி விவசாயிகளின் பல வருட நெற் செய்கை தற்போது பாதிக்கப்பட்டு ஜீவனோபாயம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது தவிக்கின்றனர்.
தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசாங்கம் தான் இவர்களுக்கான சாதகமான தீர்வை வழங்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்'.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 06 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா





Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ் Manithan

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
