ஒரே நாளில் 926 சந்தேகநபர்கள் கைது! நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்ட விசேட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம்
'முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கமைய, நேற்று சனிக்கிழமை மாத்திரம் 926 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று நாடு முழுவதும் சுமார் 928 விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பாரிய கூட்டுச் சுற்றிவளைப்பு
மேற்படி பாரிய கூட்டுச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத போதை மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, நேற்று கைதானவர்களில் மிகவும் ஆபத்தான 4 சந்தேகநபர்களுக்கு எதிராகப் போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் விசேட தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு, மேல் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், தீவிர போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ ரீதியாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு சந்தேகநபர், நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையான புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.