இலங்கையில் பலி கொடுக்கப்பட்ட சிறுவர்கள்? தாயின் வாக்குமூலத்தால் குழப்பத்தில் பொலிஸார்
காணாமல்போயுள்ள கொட்டதெனியாவ - வத்தேமுல்ல பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களை கண்டுபிடிப்பதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவர்களின் தாய், உறவினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி முதல் குறித்த சிறுவர்கள் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போயுள்ள குறித்த சிறுவர்களின் தாய், முன்னுக்குப் பின் முரணான வகையில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதையல் ஒன்றை தோண்டுவதற்கு பலியிடுவதற்காக தமது பிள்ளைகள் கடத்தி செல்லப்பட்டுள்ளார்கள் என்றும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில், ஏதேனும் விகாரை ஒன்றில் தையல் வேலைப்பாடுகளுக்காக தமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் கொட்டதெனியாவ காவல்நிலைய பொறுப்பதிகாரியின் 071 85 91 634 அல்லது கொட்டதெனியாவ காவல்நிலையத்தின் 033 – 22 72 222 அல்லது 033 – 22 40 050 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.




