வெடுக்குநாறிமலை ஆலய வழிபாடுகளுக்கு எதிராக பொலிஸாரின் அச்சுறுத்தும் செயற்பாடு
வெடுக்குநாறி ஆலய பகுதிகளில் தற்போது பொங்கலுக்கான ஏற்படுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆலய வளாகத்தை பொலிஸாரும் தொல்பொருள் திணைக்களத்தினுடைய அதிகாரிகளும் கண்கானித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆலய வளாகத்திற்குள் இரண்டு தரப்பினரையும் பொலிஸார் அனுமதித்துள்ளதோடு அந்நேரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் இரண்டு தரப்பினரையும் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
முடங்கிய செயற்பாடுகள்
இது மட்டுமன்றி ஆலய வளாகத்திற்குள் தண்ணீரை கொண்டுவர பொலிஸார் தடைசெய்துள்ளனர். இதனால் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.
ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பொலிஸார் வீதித்தடுப்புக்களை வைத்துள்ளதால் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு செல்லும் மக்கள் வாகனம் மூலம் செல்ல முடியாத நிலமை காணப்படுவதோடு நீண்ட தூரம் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
மேலும் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான செயல்
இதேவேளை பௌத்த பிக்கு தலைமையில் மூன்று வாகனங்களில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களும் வருகைதந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி நிகழ்வுகளை நடாத்தலாமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதும் பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ச்சியாக அங்கு வழிபட வருபவர்களை தடுத்துவருகின்றனர்.