தீர்வு கோரி போராட்டத்தில் இறங்கிய பருத்தித்துறை வியாபாரிகள்
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்று(24) காலை 8:30மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நகரின் மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை அமைத்து அங்கு மரக்கறிச் சந்தை, பருத்தித்துறை நகரசபை செயலாளரால் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.
வியாபாரிகளின் கோரிக்கை
எனினும், புதிய சந்தை கட்டடத்தில் போதிய இடவசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லையென்றும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், அத்துடன் நகரில் இருந்த குறித்த மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொதுமக்கள் சந்தையை நாடுவது குறைவாக காணப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தம்முடைய வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைவதாக தெரிவித்துள்ள வியாபாரிகள் பல தடவைகள் போராட்டம் நடத்தியுள்ளதாகவும் நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுவினை கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய நகரசபை அமர்வின் போது நிபுணர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆனாலும் இதுவரை வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் தாம் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும் சில மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறிச் சந்தை தமக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


