பொதுஜன பெரமுனவுக்குள் ஜனாதிபதி ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு! பதவி விலகலை அறிவிக்காத தம்மிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஜனாதிபதியின் எதிர்காலப் பணிகளுக்கு ஆதரவளிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பதவி விலகலை கட்சிக்கு அறிவிக்காத தம்மிக்க
இதேவேளை, அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகிய தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாக கட்சிக்கு தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பதவி விலகல் அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பதவி விலகியதை அடுத்து வெற்றிடமாகிய பதவிக்கு மூவர் முன்வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.