முல்லைத்தீவில் கிராமசேவகர் அலுவலகம் ஒன்றின் அவலம்: விசனம் வெளியிடும் பொதுமக்கள்
முல்லைத்தீவில்(Mullaitivu) கிராமசேவகர் அலுவலகம் ஒன்றின் முன்மாதிரியற்ற பராமரிப்புத் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் பொறுப்புச் சுமந்து செயலாற்றுவது யார் என்ற கேள்வியை தொக்கு வைக்கிறது அந்த ஆய்வு.
முல்லைத்தீவு குமுழமுனையின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் ஒன்றாக அமையும் குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் பராமரிப்புத் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் தங்கள் அதிருப்தியையும் விசனத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் கிராமசேவகர் பிரிவாக குமுழமுனை கிழக்கு கிராம சேவகர் பிரிவு அமைகின்றது. இது முல் 121 என இலக்கமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சமூகச் செயற்பாட்டு அமைப்புக்கள், புலம்பெயர் தமிழரின் பேராதரவு என்று பெருமெடுப்பில் ஊர் நலனில் அக்கறை எடுத்துச் செயற்படுவதனை அவதானிக்க முடிந்த போதும் மக்களுக்கு சேவை வழங்கும் கிராமசேவகர் அலுவலகமொன்றின் பாரமரிப்பில் அவர்கள் தோற்றுப் போனதாகவே கருத முடிகின்றது.
மலசலகூடத்தின் நிலை
குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் பிரிவில் இரண்டு மலசல கூடங்கள் உள்ளன. ஒன்று சாதாரண மலசலகூடமாகவும் மற்றையது மேம்பட்ட தரத்திலான மலசல கூடமாகவும் இருக்கிறது.
இரண்டு மலசலகூடங்களும் பயன்படுத்த முடியாதபடி இருக்கின்றன. ஏன் இந்த நிலைக்கு இவை சென்றுள்ளன என்ற கேள்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.
பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்ட இந்த மலசல கூடங்கள் சரிவர பராமரிக்கப்படாத நிலையினாலேயே இன்று பயன்படுத்தக் கூடிய நிலையில் அவை இல்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு மலசல கூடம் கதவு இல்லாத நிலையில் இருக்கின்றது. நீரைப்பெற உதவும் கை நீர்க்குழாய் உடைந்து கீழே விழுந்துள்ளது. நிலம் அழுக்கடைந்தும் இருப்பதனை அவதானிக்கலாம்.
மற்றைய மலசல கூடம் குழியினுள் குப்பைகளை நிரம்பிய நிலையில் பார்வைக்கு விரும்பத்தக்க முறையற்ற நிலையில் இருக்கின்றது. கிராம சேவகர் அலுவலகம் இயங்கு நிலையில் இருக்கின்ற போது அங்குள்ள மலசல கூடம் மட்டும் இயங்குநிலையில் இல்லாதிருப்பது கவலையளிக்கும் செயலாகும்.
செலவிட்டு அமைக்கப்பட்டவற்றை நீண்ட கால பாவனைக்கு ஏற்ப பராமரிக்கும் போது மீண்டும் மீண்டும் அவற்றை சீரமைப்பதற்காக செலவிட வேண்டிய தேவை இருக்காது என அவ்வூரின் ஒய்வு பெற்று வாழ்ந்து வரும் அரசு அதிகாரிகள் சிலரிடம் இது தொடர்பில் சுட்டிக்காட்டி கருத்துக் கேட்ட போது மேற்கண்டவாறு அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுட்டிக்காட்ட முடியாத நிலை
முறைப்படி அலுவலகர்களை சந்தித்து இத்தகைய விடயங்களை சுட்டிக்காட்டி ஏன் இவை சரிவர பராமரிக்கப்படவில்லை என கேட்டு சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்று மாற்றங்களை கொண்டுவரும் ஆளுமையை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இருப்பதில்லை.
அப்படி யாரேனும் நடந்தால் அவர்களை அவமதிக்கும் சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன என குமுழமுனையில் வாழ்ந்துவரும் பொதுச்சேவைகளில் ஈடுபடாத ஆனாலும் பொதுப்பணிகளில் அக்கறையுடைய உற்று நோக்காளர் ஒருவருடன் உரையாடும் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் கூடும் ஒரு பொது இடத்தில் மலசல கூட்டங்களின் தேவை என்பது அவசியமானது. மலசல கூடங்கள் இல்லாத போது அவற்றின் தேவையினை பொது மக்களும் ஆர்வலர்களும் சேர்ந்து சுட்டிக் காட்டுகின்றனர்.
மேன்மேலும் முயன்றும் கிடைக்காதவிடத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கிடைக்கும் வரை பலரின் போராட்டங்கள் சோர்ந்து போகாது வென்று விடுவதற்காக போராடுவதனை தாம் அவதானித்த பல சந்தர்ப்பங்கள் உண்டு என வியாபார முயற்சிகளில் ஈடுபட்டுவரும் சமூக சேவையாளர் குறிப்பிடுகின்றனர்.
ஆயினும் பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வமளவிற்கு அவற்றை பராமரித்து பயன்படுத்தும் பழக்கம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
கிணற்றின் பயன்படு தன்மை
முல்லைத்தீவு குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் கட்டுக்கிணறு ஒன்று உள்ள போதும் அதற்குள் நீர் உள்ள போதும் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
இப்போது குழாய்க்கிணறு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.கட்டுக்கிணறு பயன்படுத்தாத நிலையில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
கிணற்றடியில் அதனைச் சூழ உள்ள சீமெந்துக் கட்டுக்கள் உடைந்து அதன் மீது ஏறும் போது அச்சம் தரும் வகையில் இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.கிணற்று நீர் பச்சை நிறத்தில் பாசி படர்ந்து இருக்கிறது.
போதியளவிலான நிதியொதுக்கீடுகள் கிடைப்பதால் தான் இவர்களால் இப்படி செயற்பட முடிகின்றது.
மலசல கூட்டங்களின் தேவை உணரப்பட்டு அமைக்கப்பட்டது. ஆயினும் இன்று பயன்பாடற்ற நிலையில் இருக்கிறது.
இந்த நிலையினை சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு மலசல கூட்டத்தினை அமைக்க முயலுவார்கள். கட்டுக்கிணற்றை சீராக பராமரிக்க முடியாது குழாய்க்கிணறு அமைத்தது போல் என இது தொடர்பில் விசனம்ப்பட்டு கருத்திட்ட குமுழமுனை வாழ் மாணவர்கள் சிலரையும் சந்திக்க முடிந்தது.
வேலியின் துயரம்
கிராமசேவகர் அலுவலகத்தினைச் சூழ இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டு இரும்புக் கதவினை அமைத்து அலுவலகத்தினை கட்டுப்பாடான ஒரு எல்லையுடைய இடமாக பேணியிருந்தனர்.
[TUD28O ]
எனினும் இன்று அப்படி இல்லை.தாமரைக்கேணிக்கு செல்லும் பாதையினை ஒரு எல்லையாக கொண்டுள்ள இந்த கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் இரும்பு கம்பி வேலியின் ஒருபகுதி உடைந்து அழிந்துள்ளது.
நிலத்திற்கு சீமெந்து கட்டிட்டு இரும்புக் குழாய் கம்பிகளை நாட்டி அவற்றில் இரும்பு கம்பியில் வலையினை பொருத்தி அமைக்கப்பட்ட வேலி இலகுவில் பழுதடையாது.
அப்படி பழுதடைந்தாலும் அதனை சீர் செய்து பேண வேண்டும்.அப்படி இருந்தால் தொடர்ந்து அழிவடையும் நிலை தவிர்க்கப்படும் என பொருளாதார நலன்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டுவரும் மாணவர்கள் சுட்டிக்காட்டுவதனையும் குறிப்பிடல் பொருந்தமானதாக இருக்கும்.
கிராமசேவகரின் சேவை மக்கள் பார்வையில்
குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் இப்போது கடமையாற்றி வரும் கிராம சேவகரான மோகன் மக்களால் பாராட்டப்படும் ஒருவராக இருப்பதையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும்.
இதற்கு முன் கடமையாற்றிய பல கிராமங்களிலும் மக்களுக்கான சேவை வழங்கலில் பொறுப்புணர்வுடன் செயற்பட்டவராக அவர் இருக்கின்றார். அவர் கடமையாற்றிய கிராமங்களின் மக்களால் பாராட்டப்படுவதனையும் தேடலின் போது அறிந்துகொள்ள முடிந்தது.
இந்நிலையில் குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் உள்ள பராமரிப்பற்ற தன்மையிற்கு கிராம சேவகர் மீது குற்றம் சுமத்துவது பொருத்தமற்றதாக இருக்கும் என குமுழமுனை கிழக்கு வாழ் மக்களில் சிலர் குறிப்பிட்டனர்.
பராமரிப்பற்ற தன்மைக்கு யார் பொறுப்பு
பொது மக்களுக்கு சேவை வழங்கும் அரசு அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலகர்கள் குறிப்பிட்ட காலம் கடமையாற்றி விட்டு இட மாற்றத்திற்குள்ளாகி வேறு அலுவலகங்களுக்குச் செல்லும் நிலை இருக்கின்றது.
இந்நிலை காரணமாக பொது மக்களுக்கு சேவை வழங்கும் அலுவலகங்களின் பராமரிப்புத் தொடர்பில் பொது மக்களே அதிக கவனமெடுக்க வேண்டும்.
குறிப்பாக கிராமங்களில் உள்ள அலுவலகங்களை கிராமத்தில் உள்ள பொதுமக்களை அங்கத்தவர்களாக கொண்ட பொது அமைப்புக்களால் பாராமரிக்கப்பட வேண்டும்.
அதுவே ஆரோக்கியமானதாக இருக்கும் என சமூக விடய ஆய்வாளர் வரதனுடன் இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
கிராமம் ஒன்றின் உட்கட்டமைப்பில் அக்கிராம மக்கள் கூடிய கவனமெடுத்தால் அவற்றைப் பராமரிப்பதும் புதிய கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்வதும் இலகுவானதாக இருக்கும்.
அரசு அதிகாரிகள் மீது தொடர்ந்து குற்றம் சுமத்துவதனாலோ அன்றி அவர்களே அவற்றைப் பராமரிப்பதில் அக்கறை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாலோ எவையும் ஆரோக்கியமாக நடந்து விடாது.
அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து ஒருமித்து செயற்படும் போது விளைவுகள் வினைத்திறனாக இருக்கும்.
குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் அலுவலகத்தின் சிறந்த பராமரிப்பற்ற தன்மைக்கு மக்களுக்கும் அலுவலகருக்கும் இடையில் ஆரோக்கியமான ஒத்திசைவான தொடர்புகள் போதியளவில் கடந்த காலங்களில் இல்லாமையே காரணமாக இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 06 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.