இந்திய - இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம்
இந்த மாத இறுதிக்குள் இரண்டு நாடுகளுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
நாடுகளுக்கு இடையிலான உறவு
“இந்த திட்டம் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இணைப்பை மேம்படுத்துவதையும், நெருக்கமான உறவுகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டு அரசாங்கங்களும் கப்பல் திட்டத்தை விரைவாக செயல்படுத்த தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
எனினும் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் தொடர்பாக ஏற்கனவே உள்ள சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே மானியங்களை வழங்குவது அவசியம்.
பயணங்களின் பொருளாதார சாத்தியத்தை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலுத்தவேண்டியுள்ளது.
இந்தநிலையில் இரண்டு நாடுகளும் படகு இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபோதும், இன்னும் அவை வெற்றிபெறவில்லை. எனினும் இதற்கான வழியை கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறேன்.
அதே நேரத்தில் மிகவும் பாரம்பரியமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் வழியிலான கப்பல் சேவை தொடர்பில் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது இரண்டு முனைகளிலும் துறைமுக வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றம் பற்றி கருத்துரைத்துள்ள அவர், “இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் மட்டுமே தீவிர வறுமை பிரிவில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |