எரிபொருள் விலைகளை அதிகரிக்க திட்டம்! - எதிர்க்கட்சி வெளியிட்ட தகவல்
பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். IOC நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியதையடுத்து, எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
IOC விலையேற்றமானது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை அதிகரிக்க வழி வகுக்கும் எனவும், விலைகளை அதிகரிக்காவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 7, 8 நாட்களில் மண்ணெண்ணெய் முதல் அனைத்து எரிபொருட்களின் விலைகளும் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க (ஜே.எஸ்.எஸ்) செயலாளர் ஆனந்த பாலித இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின்சார சபை தேவையான எரிபொருளை வழங்காத காரணத்தினால் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது வறட்சியான காலப்பகுதியில் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
