இலங்கைக்கு கையை விரித்தது உலக வங்கி
உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது.
“அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது.
முன்னதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்தி
உலகவங்கி 700 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி சியோ கண்டா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் எதிர்வரும் மாதங்களில் உலக வங்கி கட்டம் கட்டமாக 700 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக வெளி விவகார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை உலக வங்கியுடன் இணைந்து செயற்படுவதன் காரணமாக அவற்றின் செயற்திட்டங்களை மறுசீரமைத்து இலங்கையின் இந்த நெருக்கடியான கட்டத்தில் உதவி புரியுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் உலக வங்கியின் பிரதிநிதி உறுதியளித்துள்ளார் என்றும் வெளி விவகார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.
உலக வங்கியின் நிலைப்பாடு
எனினும் இது தொடர்பில் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
“உலக வங்கி இலங்கைக்கு அவசரகால கடன் அல்லது புதிய கடன்களை வழங்கி ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறாக கருத்து வெளியிட்டுள்ளன.
உலக வங்கி இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்காக பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.
மேலும் உணவு, கல்வி, விவசாயம் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களை மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறோம்.
ஆனால், முறையான பொருளாதார கொள்கை வரைவைக் கொண்டுவராதவரை இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை" என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.