தீர்வுப் பொதியுடன் சென்ற பிள்ளையானை திருப்பி அனுப்பிய பண்ணையாளர்கள்(Video)
கடந்த 12 தினங்களாக மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டமானது கொட்டும் மழையிலும் அடிக்கும் வெயிலிலும் தொடர்ந்த வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றது.
அதன் அடிப்படையில் பண்ணையாளர்களின் நில மீட்பு கோரிக்கை அடங்கிய போராட்டத்திற்கு தீர்வு ஒன்றினை பெற்று தருவதாக கூறிய சி. சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபரும் கடந்த காலங்களில் உறுதியளித்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம்(26.09.2023) பண்ணையாளர்களின் போராட்ட கலத்துக்கு தீர்வு பொதியுடன் சென்ற இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை
போராட்டம் நடத்தும் மக்களை சந்தித்த சி. சந்திரகாந்தன், தற்காலிகமாக காவல் அரண் ஒன்றை அமைப்பதாகவும் ஜனாதிபதியுடன் பேச முடியாமல் போய்விட்டதாகவும் ஜனாதிபதி செயலாளருடன் குறித்த விடயம் தொடர்பாக பேசியுள்ளதாகவும், இதன் காரணமாக தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பண்ணையாளர்கள், ஒரு நிரந்தர தீர்வு எட்டும் வரைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தங்களுக்கான தீர்வு வரும் வரைக்கும் தாங்கள் போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
போராடுவது உங்களது ஜனநாயக உரிமை நீங்கள் போராடலாம் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ஒரே தடவை எல்லாவற்றையும் செய்ய முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இதை நகர்த்த முடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பண்ணையாளர்கள் எப்போது முழுமையாக குடியேற்றவாசிகளை அகற்ற முடியுமோ அப்போது நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.