நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளை அசௌகரியப்படுத்தும் யாசகர்கள்
நுவரெலியா (Nuwara Eliya) நகரில் சுற்றுலாப் பயணிகளையும் பொதுமக்களையும் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள் மற்றும் யாசகம் செய்பவர்கள் அசௌகரியப்படுத்துவதாக அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தினமும் பெருமளவு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசாி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
தகாத வார்த்தைகள்
குறித்த பெண்கள் கைக்குழந்தையுடன் அமர்ந்து இருப்பதாகவும் அதிகமானவர்கள் கர்ப்பிணிப் பெண்களாகவும் பாலூட்டும் தாய்மார்களாகவும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊதுபத்தி விற்பனை செய்யும் போது, ஊதுபத்தியினை வாங்காதவர்களிடம் இவர்கள் தகாத வார்த்தைகளால் அவதுாறாக பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் தெரிந்திருந்தும், தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அப்பகுதி வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இனி வரும் காலங்களில் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |