மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இன்று (05.09.2026) அதிகாலை நடைபெற்றது.
புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக பாதயாத்திரை செல்லும் ஆலயம் என்ற பெருமையினை ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் பாதயாத்திரை சிறப்புக் கொண்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பாத யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

வருடா வருடம் இடம்பெறும் இப்பாதயாத்திரை இவ்வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது.
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் பாதயாத்திரையினை முன்னிட்டு விசேட திருப்பலி பூஜை நடைபெற்றது. இந்த திருப்பலியில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பாதயாத்திரை
திருப்பலியினைத் தொடர்ந்து காலை பாதயாத்திரை ஆரம்பமாகி வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம் ஊடாக சென்று வலையிறவுப் பாலம் ஊடாக பாதயாத்திரை வவுணதீவினை அடைந்து அதன் ஊடாக ஆயித்தியமலை வரைசென்றது. விசேட சொரூபமும் இதன்போது கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


