நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம்:மருந்தக உரிமையாளர்களின் சங்கம் எச்சரிக்கை
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் கடும் நடைமுறைகளால் நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மருந்தக உரிமையாளர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், தகுதிவாய்ந்த முழுநேர மருந்தாளர்களை (Pharmacists) பணிக்கமர்த்த முடியாததால் மூடப்படும் அபாயம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டிப்பான நடைமுறைகள்
இந்த ஆண்டு முதல், மருந்தகங்கள் திறந்திருக்கும் நேரங்களில் தகுதிவாய்ந்த மருந்தாளர் பணிக்கமர்த்தப்பட வேண்டும் என்ற சட்ட நடைமுறையை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு கண்டிப்பாக அமல்படுத்த முடிவு செய்துள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதனால் 2026 ஆம் ஆண்டுக்கு குறித்த நடைமுறையை செயற்படுத்த முடியாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் தங்களின் மருந்தக அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுதும் இதுவரை 4803 மருந்தகங்கள் இருப்பதாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் 2026 ஆம் ஆண்டுக்கான 2254 மருந்தகங்களின் அனுமதிப்பத்திரங்களே புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலம் பெப்ரவரி 28 திகதியுடன் முடிவடையவுள்ளது. ஆனால் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் இந்த கண்டிப்பான நடைமுறையானது அசாதாரணம் என அகில இலங்கை மருந்தக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.