4.83 மில்லியன் ரூபா மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் பறிமுதல்
கடல்மரர்க்கமாக சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 4.83 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் நீர்கொழும்பு அருகே பிட்டிபன மீன்பிடித்துறையில் நடைபெற்றுள்ளது.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள பிட்டிபன மீன்பிடித்துறை அருகே, நேற்றுமுன்தினம்(24) காலை திடீர் சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 4.83 மில்லியன் ரூபா மதிப்புள்ள மருந்துப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பந்தப்பட்ட மருந்துப்பொருட்கள் ஒரு சரக்கு லொறியில் கொண்டு செல்லப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இது முறையான அனுமதி மற்றும் தரப் பரிசோதனை இன்றி கடல் வழியாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப்பொருட்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த மருந்துப்பொருட்களை கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு படகுகளும், அந்தக் படகுகளின் சந்தேகத்திற்குரிய இரண்டு மாலுமிகளும் கைது செய்யப்பட்டு துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 முதல் 49 வரை வயதுடையவர்கள் என்றும் அவர்கள் நீர்கொழும்பு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. துங்கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.