தீவிரமடைந்துள்ள போர் பதற்றம்! - பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு
உக்ரைன் - ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியாவில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் என்றும் இல்லாத அளவிற்கு எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி விலையை விட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 149.30P ஆக உயர்ந்துள்ளது. விரைவில் பெட்ரோல் விலை £1.50 ஐ கடக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது. அத்துடன், உலகளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து தனது கச்சா எண்ணெயில் 6 வீதம் மற்றும் எரிவாயுவில் ஐந்து வீதம் ரஷ்யாவிடமிருந்து பெறுகிறது, ஆனால் பொருளாதாரத் தடைகள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தலாம் எனவும், இதனால் விலைகளை உயர்த்தக்கூடும் என்ற கவலைகளும் ஏற்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால், பிரித்தானிய நுகர்வோர் ஏற்கனவே எரிபொருளுக்கு அதிக விலை கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது பொருளாதார தடை
ரஷ்யா மீது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான மொஸ்கோவின் நடவடிக்கைகள் "இறையாண்மை அரசின் மீதான ஆக்கிரமிப்பு, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் அவர் கூறினார்.
உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்
ரஷ்யா போர் தொடக்க தயாராக இருக்கும் நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கிலோ மீற்றர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளன.
இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும். இந்த உத்தரவு 30 நாட்கள் நடைமுறையில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார தடை உலகளாவிய சந்தையை பாதிக்கும்
ரஷ்ய படைகள் வெளிநாட்டு எல்லையில் நுழைய அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன.
இந்த நிலையில் தங்கள் மீதான பொருளாதாரத்தடை உலகளாவிய மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என ரஷியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் கூறுகையில் ‘‘எங்களுக்கு எதிரான தடை, உலகளாவிய மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனர்ஜி மார்க்கெட்டிலும் பாதிப்பு ஏற்படுத்தும். விலைவாசி உயர்வை மக்கள் உணர்வதை அமெரிக்கா எளிதாக புறந்தள்ளி விடாது’’ என்றார். மேலும், மேற்கத்திய நாடுகளின் எந்த தடையும் இல்லாமல் ரஷியா வாழ்ந்த ஒரு நாள் கூட எனக்கு நினைவில் இல்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்படுவது என்பது குறித்து நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். வாழ்வதற்கு மட்டுமல்ல. எங்கள் நாட்டை முன்னேற்றுவதற்கும் தான் எனத் தெரிவித்துள்ளார்.