மட்டக்களப்பில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை: பொலிஸார் குவிப்பு (Photos)
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(22) மாலை எரிபொருள் வந்த நிலையில் அதனை மக்களுக்கு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் போது சிலர் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை குழப்பும் வகையில் செயற்பட்டதால் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பாதிப்பு
கடந்த சில நாட்களாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், சிலர் மேற்கொண்ட குழப்ப நிலை காரணமாக நீண்ட நேரமாக காத்திருந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை முற்றுகையிட்டதை தொடர்ந்து பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலைமை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.