எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண மாற்றம் குறித்து அமைச்சர் நளிந்த வெளியிட்டுள்ள தகவல்
மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகள் உலக சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (20.03.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எவ்வித தடையுமின்றி மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். இதற்கான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் அரசு தற்போது முன்னெடுத்து வருகின்றது.
மின்சார நுகர்வு என்பது மாதத்திற்கு மாதம் மாறுபடக்கூடியது; சில காலங்களில் அதன் தேவை கணிசமாக அதிகரிக்கின்றது.
உலக சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன. சாதாரண காலங்களில் கோரப்படும் 'டெண்டர்' விலைகளை விடவும் தற்போது அதிக விலைகளே காணப்படுகின்றன.

எதிர்காலத் தீர்மானங்கள்
இவ்வாறான சவாலான உலகளாவிய பொருளாதாரச் சூழலிலேயே நாம் எதிர்காலத் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகிய அனைத்தும் உலகச் சந்தையில் நிலக்கரி மற்றும் மசகு எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சில அறிக்கைகள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவை குறித்த முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri