நாட்டில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு : பொதுமக்கள் விசனம் (Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
வவுனியா
வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று (28) காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எரிபொருள் (பெற்றோல் மற்றும் டீசல்) இன்மை காரணமாக நகரிலுள்ள சில எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக காலை வேளையில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டுள்ளன.
அத்துடன் சில எரிபொருள் நிலையத்தில் டீசல் இல்லை என பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதன் காரணமாக சில எண்ணை நிரப்பு நிலையங்கள் முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளன.
இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் டீசல் எண்ணெய்யினை தேடி ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கிச் சென்று வருவதாகவும் இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டிருப்பதாகவும் சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவுக்கு எரிபொருள் வழங்கப்படாத நிலைமை காணப்படுவதோடு, பொது மக்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பல எரிபெருள் நிரப்பு நிலையங்களில் பெரும்பாலான நேரங்களில் எரிபொருள் இல்லை என்ற அறிவித்தல் பதாகையே காணப்படுவதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் நெற் செய்கையாளர்கள் அறுவடை செய்யும் இயந்திரத்திற்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
உரிய காலத்தில் அறுவடைய செய்ய முடியாத நிலைமையால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை வழமைக்குத் திரும்பாதன் காரணமாக விவசாயிகள். உத்தியோகத்தகர்கள் என பலரும் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



