தலைகீழாக கவிழ்ந்து கொள்கலன் விபத்து: வீதியெங்கும் வழிந்தோடிய எரிபொருள்
மாத்தளை-லக்கல, வில்கமுவ பிரதேசத்தில் எரிபொருள் தாங்கி ஒன்று கவிழ்ந்ததில் மண்ணெண்ணெய் வீதியெங்கும் வழிந்தோடியதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து வில்கமுவ நோக்கி பயணித்த இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இந்த எரிபொருள் தாங்கி நேற்று எல்வானா மலை சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது எரிபொருள் தாங்கி கவிழ்ந்ததில் பெருமளவிலான மண்ணெண்ணெய் வீதியில் கொட்டி வீணானதுடன், கொட்டிய மண்ணெண்ணையை அருகில் இருந்த மக்கள் சேகரித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை
இதேவேளை சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இந்த பகுதியில் ஏராளமானோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான மலைச்சரிவுகள் உள்ள இப்பகுதியில் அபாய அறிவிப்பு பலகைகளை முறையாக பயன்படுத்தி விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை வில்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.