டயானாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்திருந்தது.
இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்டபோதே உயர் நீதிமன்றத்தினால் இன்று (19.01.2023) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு மனு தாக்கல்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் குடியுரிமை தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் உரிய மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பலரை தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாக பெயரிட்ட ஹேரத், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என குற்றம் சாட்டி தாம் முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததாக கூறினார்.
எவ்வாறாயினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதிபதி பெஞ்ச் அக்டோபர் 31, 2023 அன்று மனுவை நிராகரிப்பதான தீர்ப்பை வழங்கியது.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது என்றும், இராஜாங்க அமைச்சர் கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |