அமைச்சர் உபாலி பன்னிலகேவுக்கு எதிரான மனு! விசாரணைக்கு திகதி குறிப்பு
அமைச்சர் உபாலி பன்னிலகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே , தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுள்ளார்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக
எனினும் தேசியப்பட்டியலில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவர் ருஹுணைப் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
அவர் அப்பதவியை ராஜினாமா செய்யவோ, உரிய முறையில் விடுமுறை பெற்றுக்கொள்ளவோ இல்லாத நிலையிலேயே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அது தேர்தல் சட்டங்களுக்கு முரணானது என்பதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரி அபிநவ நிவஹல் பெரமுண கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு நேற்று (29) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ரொஹான்த அபேவர்த்தன மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது குறித்த மனு மீதான வழக்கை அடுத்த ஆண்டின் பெப்ரவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



