தேசபந்துவுக்கு எதிரான மனு: வெளியான நீதிமன்ற தீர்ப்பு
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
குறித்த மனுக்களை மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒத்திவைக்கப்பட்ட விசாரணை
கார்டினல் மால்கம் ரஞ்சித், இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிற கட்சிகளால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேற்குறிப்பிட்டவாறு 9 மனுக்களும் பிரீத்தி, பத்மன் சூரசேன, யசந்த கோட்டாகொட, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் இன்று(24.02.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதி தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரான தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்களுடன் சுட்டிக்காட்டினார்.
எனவே, மனுக்களை விரைவாக விசாரிக்குமாறும் அதற்கு ஒரு திகதியை வழங்குமாறும் ரொமேஷ் டி சில்வா கேட்டுக்கொண்டார். இதற்கமைய, மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளுக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |