வாவியில் நீராடிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மாயம்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தை சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு வாவியில் நீராடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழுகாமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான (55 வயது) மதிக்கத்தக்க ஞானசேகரம் என்பவர் நேற்று மாலை பழுகாமத்தில் மட்டக்களப்பு வாவியை ஊடறுக்கும் ஆற்றுக்கட்டுப் பாலத்தின் கீழ் நீராடியுள்ளார்.
இதன்போதே அவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாமோ எனவும் ஆற்றுக்கட்டுப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் காணாமல் போன குறித்த நபர் இன்று காலை வரை கிடைக்காத இந்நிலையில் படகு மூலம் தேடி வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க தற்போது மாரி மழைக்காலம் ஆகையால் மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக நன்நீர் மீன்பிடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தவாரம் இவ்வாறு மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பழுகாமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் முதலையின் பிடிக்கு உள்ளாகி கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.





