மாணிக்கக்கற்களை பெற்றுக்கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
சுமார் 8 கோடி ரூபா பெறுமதியுடைய 10 மாணிக்கக்கற்களை பெற்றுக்கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவையை சேர்ந்த 78 வயதான ஓய்வு பெற்ற மீன்பிடி பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம்
இதேவேளை, கண்டியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் தங்க நகை விற்பனையகம் ஒன்றில் 21 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே கடையில் ஊழியராக பணிபுரிந்த அவர், 9 தங்க மோதிரங்கள் மற்றும் 4 வெள்ளி மோதிரங்களை திருடிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.