சீதுவையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி
கம்பஹா மாவட்டம் சீதுவை கொட்டுகொட பிரதேசத்தில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 39 வயதான நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம்-பொலிஸார் சந்தேகம்
ரந்தொழுவ பிரசேதத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் சாரதியான அவர், கொட்டுகொட - சீதுவை வீதியில், மோட்டார் சைக்கிளில் வந்து நிற்றுக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், கைதுத்துப்பாக்கியால், இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட நபர் பஸ் பொட்டா என்ற பாதாள உலக தலைவரின் சகாவை கொலை செய்ய உளவுப்பார்ததார் என்ற குற்றச்சாட்டில் ஒரு முறை கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தவிர வேறு குற்றங்களை செய்துள்ளமைக்கான தகவல்கள் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலை செய்ய உளவுப்பார்த்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சீதுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.