முழுமையாக கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான முக்கிய தகவல்
கோவிட் தடுப்பூசிகள் மூன்றையும் பெற்றுக் கொண்டுள்ள நபர் கோவிட் தொற்றுக்குள்ளானால் அவர்களால் மற்றவர்களுக்கு கோவிட் தொற்றும் வாய்ப்பு மிகவும் குறைவு என கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் நதீக ஜானகே தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர், கோவிட் தொற்றுக்குள்ளான ஏழு நாட்களுக்குப் பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்கவும், தினசரி கடமைகளைச் செய்யவும் அனுமதிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் கோவிட் தொற்றுக்குள்ளாகினால் 7 நாட்களின் பின்னர் மீண்டும் பணிக்கு செல்லும் போது கோவிட் பரிசோதனை அறிக்கை அல்லது PCR அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், உலகில் ஒவ்வொரு பன்னிரெண்டு வினாடிகளுக்கு ஒருமுறை ஒரு கோவிட் தொற்றாளர் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.