இலங்கையில் தொடரும் மரணங்கள்! சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குழந்தை தொடர்பில் விசாரணை
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அறுஷா அஷ்விதா வெல்கம என்ற இரண்டரை வயது குழந்தை கடந்த 25ம் திகதி உயிரிழந்திருந்தது.
திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தை, கடந்த 22 ஆம் திகதி காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும் 6 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் திகதி குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வெளியான காரணம்
பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
எவ்வாறாயினும், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறப்பு போதனா சிறுவர் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அறுவைசிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மயக்க மருந்து காரணமாக குழந்தை இறந்ததாக சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |