மக்களை ஒன்றுதிரட்டி போராடவேண்டிய நிலையேற்படும்! - சீ.யோகேஸ்வரன் எச்சரிக்கை
“மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சிங்கள குடும்பங்களை குடியேற்ற முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றுதிரட்டி அதற்கு எதிராக போராடவேண்டிய நிலையேற்படும்” என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பிழையான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது. மாவட்ட அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்பட வேண்டும்.
தொல்பொருள் செயற்பாடுகள் சந்திரிக்கா ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டது. மகிந்த ஆட்சிக்காலத்தில் அது கடுமையாக முனைப்பு பெற்றது. நல்லாட்சியிலும் அது முன்னெடுக்கப்பட்டபோது தங்களின் எதிர்ப்பு காரணமாக அது நிறுத்தப்பட்டது.
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சந்திரகாந்தனின் தொகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த சட்டவிரோத குடியேற்றத்தினை தடுக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் மிகவும் தீவிரமாகச் செயற்படுகின்றது. அந்தவகையில் வட மாகாணத்தில் வெலிஓயாவில் ஒரு பிரதேச செயலகத்தைக்கூட உருவாக்கிக் கொண்டு அவர்கள் சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
அவர்கள் வெலிஓயா பகுதியில் வாழ்ந்திராத மக்களாவர். அதேபோன்று பல குடியேற்றங்கள் திட்டமிட்டவகையில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்பிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தான் வெலிஓயா திட்டத்தை மேற்கொண்டது. இப்போது கோட்டாபய அரசாங்கம் மீதி வேலையை ஆரம்பித்திருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது திட்டமிட்ட குடியேற்றத்திற்கான வேலைகள் நடைபெறுகின்றன. காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாகாணசபைக்கோ ஒரு சிங்களப் பிரதிநிதி செல்லவில்லை.
அதனை உருவாக்க வேண்டும் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்துச் செல்ல வேண்டும் என்ற வகையிலும் திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
அதன் முதற்கட்டமாகவே மயிலத்தமடு, பெரியமாதவனை போன்ற பகுதிகளில் சிங்கள பயிர்ச்செய்கையாளர்கள் என்ற வகையில் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களை அங்கு உள்நுழையவைத்து அதன் பிரகாரம் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு குடியேற்ற நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரினால் திட்டமிட்டு நடைபெறுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.