குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ள ஹிஜ்ரா நகர் கிராம மக்கள்
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள ஹிஜ்ரா நகர் கிராம மக்கள் தங்களுக்கான குடி நீர் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலும் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியை அண்டியதாக உள்ள கிராமமே ஹிஜ்ரா நகர் கிராமமாகும். இக் கிராமத்தில் முந்நூறு குடும்பங்களைச் சேர்ந்த 1064 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் மற்றும் கூலித் தொழிலாகும். இப் பகுதி மக்கள் தங்களுக்கான குடி நீர் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவர்களுக்கு அரசாங்கத்தினாலும் தொண்டு நிறுவனங்களினாலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதனுடாகவும் தங்களது தேவைக்கான நீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இவர்களின் குடி நீர்ப் பிரச்சினையை ஓரளவு தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் வாகனத்திற்கான எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளனி மற்றும் வாகனத்தின் ஊடாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள தண்ணீர் தட்டுப்பாடாக உள்ள பிரதேசங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு வழங்கப்படும் நீரும் மழைக் காலம் ஆரம்பித்தால் வழங்குவது நிறுத்தி விடுகின்றார்கள். கிணறு இல்லாத நாங்கள் நீர் வழங்குவதனை நிறுத்தினால் நீருக்கு என்ன செய்வது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளனி மற்றும் வாகனத்தின் ஊடாக குடி நீர் வழங்கப்பட்டு வருவது வழக்கம், தற்போது மழை பெய்ய ஆரம்பித்ததும் பிரதேச செயலகங்களினால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாக எங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கான குடிநீர் வழங்குவதனை நிறுத்தியுள்ளோம்.
இருந்தும்
குறித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுக்கூடாக சில இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து
வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.