அரசாங்கம் மேலும் 20-25 வருடங்கள் நீடிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்
இந்த ஆட்சி மேலும் 20 அல்லது 25 ஆண்டுகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என மக்கள் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பலத்த நம்பிக்கை நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட "மிகவும் கஷ்டமாக இருக்கிறது" போன்ற கோஷங்கள் தற்போது மக்கள் மத்தியிலிருந்து மறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் இப்போது எவ்வித குறைகளையும் கூறுவதில்லை என்பதுடன், அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்கள் குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடமிருந்து நமக்குக் கிடைக்கும் நன்மதிப்பு மற்றும் கருத்துகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு இந்த அரசாங்கம் மேலும் 20 முதல் 25 ஆண்டுகள் தேவை என்பது தெளிவாகப் புரிகிறது எனவும் மக்கள் இப்போது கண்ணீர் சிந்துவதோ அல்லது புலம்புவதோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் மணித்தியாலத்திலிருந்தே அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விவசாயிகள் தங்களை "மன்னர்கள்" என்று நினைக்கும் ஒரு மனநிலையில் இருப்பது மிகவும் ஆரோக்கியமான விடயமாகும், கடந்த காலத்தில் சில குழுக்களால் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த கௌரவத்தை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.