நீண்ட நேரம் காத்திருந்து சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் பெறும் மக்கள் (VIDEO)
நாடு பூராகவும் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றமையால் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று அதனைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுக்குச் சீராக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கை வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரின் முயற்சியினால் இடம்பெற்றது.
லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 180க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் வாழைச்சேனை, பேத்தாழை, கல்குடா, ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.
குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் எரிவாயு கொள்வனவு செய்ய வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எரிவாயு விநியோகம் இடம்பெற்றது.
கடந்த சில நாட்களுக்கும் மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில், எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாகத் தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையிலிருந்தே குறித்த இடத்தில் காத்திருக்கும் நிலைமை காணப்படுகின்றது.
இந்த எரிவாயுக் கொள்வனவில் சிறுவர்கள், பெண்கள் அதிகளவாக வருகை தந்து பெற்றுச் சென்றதைக்காண முடிந்தது. மேலும் எரிவாயுவைக் கொள்வனவு செய்யக் காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காத நிலைமையும் காணப்பட்டுள்ளது.
செய்தி - நவோய்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
தற்போது அறுவடைக்காகக் காத்திருக்கும் விவசாயிகள் மற்றும் உழவு இயந்திரத்திற்குத் தேவையான எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்கள்.
உயிலங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று டீசல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து டீசலினை பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். மன்னார் மாவட்டத்தில் 60 வீதமான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது எனவும் மீதம் 30வீத வீதமான அறுவடை செய்யவுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
அதிலும் 176ரூபாய்க்கு டீசல் பெறவேண்டியுள்ளது, அதுவும் போதியளவு பெறமுடியவில்லை என்பதோடு உயிலங்குள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது?
செய்தி - கோகுலன்
வவுனியா
வவுனியாவில் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளும் இல்லத்தரசிகளும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை அவதானிக்க முடிந்தது.
வவுனியாவில் இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இன்று (22) மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குடும்ப உறுப்பினர்கள் உள்ள அட்டைக்கு மாத்திரம் 1000 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் எனகாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 500 ரூபாவுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை டீசலை பெற்றுக் கொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் பல மணி நேரமாகக் காத்திருக்கும் நிலையையும் அவதானிக்க முடிந்தது.
செய்தி - கோகுலன்
ஹட்டன்
மண்ணெண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்காக இன்று காலை முதல் ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மின்வெட்டு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகச் சமைக்க மற்றும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு மண்ணெண்ணெய் எடுத்துச் செல்வதாக ஹட்டன் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்ணெண்ணெய் பெற வந்த வாடிக்கையாளர்களுக்கு 05 லீற்றர் மாத்திரமே வழங்குவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து மண்ணெண்ணெய் வாங்கப் பிரதான வீதியின் ஓரத்தில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தனர்.
செய்தி - திருமால்
யாழ்ப்பாணம்
வடமராட்சியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல், டீசல் இல்லாத நிலை காணப்படுகிறது. அத்துடன் மண்ணெண்ணெய்க்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதைக் காணமுடிகின்றது.
வடமராட்சி பகுதியில் உள்ள புறாப்பொறுக்கி, நெல்லியடி, மந்திகை, ஓராங்கட்டை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல், மற்றும் டீசல் என்பன தீர்ந்துள்ளன.
மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றுவருகிறது. மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்டவரிசையில் நின்று கொள்கலன்களில் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை நெல்லியடி, கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் தமது விற்பனை நிலையங்கள் ஊடாக குடும்ப பங்கீட்டு அட்டைக்கு இரண்டு லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - கோகுலன்