சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டவர்கள் கைது(Photos)
இலங்கையின் - நீர்கொழும்பு கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நேற்று(21) காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதெ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் கடற்படையினரால் கைது
நீர்கொழும்பு கடற்பகுதியில் சந்தேகிக்கப்படும் வகையில் இருந்த உள்ளூர் மீன்பிடி படகினை சோதித்த போது அதில் வெளிநாட்டுக்கு செல்வதற்காக பலர் இருந்ததுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 33 பேரில் 19 ஆண்களும், 09பெண்களும் இருந்துள்ளதோடு 05 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கைதானவர்கள் சிலாபம், மாரவில, திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற சுமார் 500க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவின் கடற்பகுதியில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் வருபவர்கள் தொடர்ந்து நாடு கடத்தப்படுவார்கள் என அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த போர் மற்றும் இனரீதியான அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா
போன்ற நாடுகளுக்கு படகு வழியாக தஞ்சமடைந்துள்ளனர்.
மீண்டும் அதிகரித்துள்ள தஞ்சக்கோரிக்கை
கடந்த சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவை நோக்கிய தஞ்சக்கோரிக்கை பயணங்கள் அவுஸ்திரேலிய அரசின் தொடர் நடவடிக்கைகளால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால், இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் மீண்டும் அவ்வாறான பயணங்கள் அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.