தொடர் சிரமத்தில் மட்டக்களப்பு - பாலமீன் காடு மக்கள்.. முன்வைக்கப்படும் கோரிக்கை
மட்டக்களப்பு - பாலமீன் காடு பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கான நோயாளர் காவு வண்டி இல்லாது சிரமப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வாராந்த ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்,
"பாலமீன் காடு பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கான நோயாளர் காவு வண்டி இல்லாது சிரமப்படுவதாக நோயாளிகள் எங்களிடம் முறைப்பாடு செய்தனர்.
தற்காலிக ஏற்பாடு
இது குறித்து கடந்த வாரம் மட்டு. போதனா வைத்தியசாலை பணிப்பாளரை கட்சி சார்பில் சந்தித்து பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் காவு வண்டி தேவை மற்றும் அதற்கான சாரதி ஒருவரை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன். அவர் அப்போது எழுத்து மூலமான அறிக்கை தருமாறு கோரினார்.

அதை வழங்கியதையடுத்து பணிப்பாளர் தற்போது நிரந்தரமாக நோயாளர் காவு வண்டி மற்றும் அதற்கான சாரதியையும் வழங்க முடியாது எனவும் தனது வாகனத்தின் சாரதியை மேலதிக கொடுப்பனவு வழங்கி இரவு வேளைகளில் நியமிப்பதாகவும் நோயாளிகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி தேவைப்படுகின்ற போது மட்டு. போதனா வைத்தியசாலையில் இருந்து 5 நிமிடத்தில் அனுப்பி வைப்பதாக எனக்கு உறுதிமொழி தந்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் இரவு வேளைகளில் உங்களுக்கு மேலதிகமான சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு செல்லவுள்ள நோயாளிகள் எந்த விதமான அச்சமின்றி பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரை நாடி நோயாளர் காவு வண்டியை எடுத்து தருமாறு கூறுங்கள், அவர் அதற்கான ஏற்பாடு செய்வார்.
அதை வைத்தியர் செய்ய மறுத்தால் அது தொடர்பாக ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக எங்களுக்கு தந்தால் வைத்திய பணிப்பாளரை தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.