வீட்டுக்குள் பெய்யும் மழை! - ஆதிவாசி மக்களின் ஆதங்கம் (Photos)
எமது கிராமத்தில் புதிதாக திருமணம் செய்த குடும்பங்கள் அவர்களுக்கு வீட்டு வசதியின்றி தமது பெற்றோருடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வனவளத் திணைக்களத்தால் எம்மைச் சூழவுள்ள நிலப்பரப்பில் எல்லைக் கற்களை இட்டுள்ளதனால் புதிதாக வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்குரிய நிலப்பகுதியைப் பெறுவதற்குச் சிரமமாகவுள்ளது.
இந்த நிலையில் சிறிய நிலப்பகுதியைப் பெற்று சிறியதொரு இலுக்குப்புல் குடில் கட்டி வாழ்வதற்கும் முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு குஞ்சங்கற்குளத்தில் சுமார் 18 குடும்பங்களும், மதுரங்கேணிக்குளம் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களுமாக வீடுகளின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
முன்னர் நாங்கள் இலுக்குப் புல் வேயப்பட்ட கொட்டில்களில் வாழ்ந்தோம், கல் வீடு என்றால் என்ன என்று தெரியாத நிலமையில் தான் வாழ்ந்து வந்தோம். அவ்வாறு வாழ்ந்து வந்த எமக்காக யுத்தத்திற்குப் பின்னர் நேர்ப் திட்டத்தினூடாக அரசாங்கம் எமக்கு கல் வீடுகளைக் கட்டித்தந்தார்கள்.
அப்போதைய நிலையில் ஒரு வீடு கட்டுவதற்கு எவ்வாறான மண், கல், மரம் போன்றன அதற்குப் பாவிக்க வேண்டும் என்பது எமக்கு தெரியாது.
இவ்வாறு எமது மக்களுக்காக நூறுக்கு மேற்பட்ட வீடுகள் கட்டித்தந்தார்கள். அப்போது நாங்கள், இலுக்குக் கொட்டில்கைளை விட்டு விட்டு அரசாங்கம் கட்டித்தந்த கல் வீட்டுக்கு மாறினோம்.
இப்போது தான் தெரிகின்றது எமது வீடுகளுக்குப் பயன்படுத்தியுள்ள தளபாடங்கள் அனைத்தும் தரம் குறைந்தவையாகவுள்ளன.
மழை பெய்தால் வீட்டுக்குள் தான் மழைநீர் வருகின்றது. இந் நிலையில் 2019 இல் அரசாங்கத்தினால் சில வீடுகள் திருத்திக் கொடுக்கப்பட்டன. பின்னர் எமது அடையாள அட்டை, காணி உறுதிப்பத்திரம் உள்ளிட்டவற்றை போட்டோ பிரதி எடுத்து தருமாறு அடிக்கடி கேட்பார்கள் நாங்கள் மிகுந்த பிரயத்தனப்பட்டு பிரயாணம் செய்து அதனைக் கொண்டு கொடுத்து வருகின்றோம்.
ஆனாலும் எதுவித முன்னேற்றமும் இல்லை. இவ்வாறான நிலமையில்தான் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
நகர்ப்பகுதியை எடுத்துக் கொண்டால் அனைத்து வீதிகளும். காபட் இடுவதும், கொங்றீட் இடுவதும், கிறவல் இடுவதுமாகத்தான் வீதி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எமது கிராமத்தின் நிலமை குறித்து நான் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் எழுத்துமூலம் அறிவித்திருந்தேன். அதன் நிமித்தம் குறிப்பிட்ட அளவுதான் வீதி செப்பனிடப்பட்டுள்ளது.
மழைகாலத்தில் எமது வீதியூடாக எந்த விதத்திலும் பயணிக்க முடியாது. அவ்வாறு கர்ப்பிணி தாயொருவருவரை நான் கையிலேதூக்கிக் கொண்டு சென்றேன். பின்னர் லொறி ஒன்று வந்தது அதில் ஏற்றிக் கொண்டு சென்றேன். நாங்கள் வோட்டு போட்டு வெற்றிபெற வைத்த மக்கள் பிரதிநிதிகளும். எம்மைக் கவனிக்காமல் உள்ளார்கள்.
சிலர் வருகின்றார்கள் போகின்றார்கள், வீதிகளை அளவீடு செய்துவிட்டுப் போகின்றார்கள். ஆனால் எதுவும் நடைபெற்றதாக இல்லை.
இது எல்லாம் பார்க்கும்போது மன விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எமது கிராமத்தில இளவயது திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக பாடசாலைப் பருவத்திலேயே பிள்ளைகள் திருமணம் செய்து கொள்கின்றார்கள். முன்னர் இளவயதுத் திருமணங்களையும், பாடசாலை இடைவிலகல்களையும், நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம்.
இதன் முற்றுமுழுதான தவறு பெற்றோர்களிடத்தில் தான் உள்ளது. பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும்போதே திருமண ஆசையை பெற்றோர் வளர்கின்றார்கள். இதனால் படிப்பில் பிள்ளைகள் அக்கறைகாட்டுவது குறைந்து விடுகின்றது.
இதில் பிள்ளைகளின் தவறு கிடையாது பெற்றோரின் குறைபாடுதான். அண்மையில் எமது கிராமத்திற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் வருகை தந்து எமது மக்களின் நிலமைகளைப் பார்வையிட்டனர்.
அவர்களிடமும் எமது கிராமமக்களின் குறைபாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்தேன். காட்டுப் பகுதியை அண்டியதாக அமைந்துள்ள குஞ்சங்கற்குளம், மதுரங்கேணிக்குளம், ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் மதுரங்கேணிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் எமது பிள்ளைகள் படிக்கின்றார்கள்.
மிகவும் வறுமைக்குட்பட்ட எமது பிள்ளைகளின் நலன் கருதி இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் சமைத்த உணவு, பசும்பால், போன்றன அண்மைக்காலமாக வழங்கப்பட்டு வரப்படுவதோடு, பாடசாலைக்குரிய கணிணிகளையும் வழங்கியுள்ளார்கள்.
அந்த அமைப்புக்கு எமது கிராமம் சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் பாடசாலைக்கு ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது என தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள குஞ்சங்கற்குளம் கிராமத்தில் வசித்து வரும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்காக ஆதிவாசி மக்களின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்டதே குஞ்சங்கற்குளம், மற்றும் மதுரங்கேணிக்குளம் ஆகிய ஆதிவாசி மக்கள் வாழும் கிராமங்களாகும். இளவயது திருமணத்தை உடன் நிறுத்த வேண்டும்.
பாசாலை அதிபர் ஆதங்கம் தமது பிள்ளைகளின் மீதும், சமூகத்தின் மீதும் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையின்மை காரணமாகத்தான் பிள்ளைகள் அதிகளவு இடைவிலகிச் செல்கின்றனர். சிறு வயதில் குறிப்பாக பாடசாலை படிக்கும் காலத்திலேயே திருமணம் செய்து வைக்கின்றனர்.
கடந்த யுத்த காலத்திலிருந்து இற்றைவரையில் இப்பாடசாலையில் இருந்து கற்பித்து வருகின்றேன். ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் கடந்து வந்து இங்குள்ள மாணவர்களின் நலன் கருத்தி தம்மை அற்பணித்து பாடம் புகட்டி வருகின்றார்கள்.
மாணவர்களும், கல்வி கற்பதற்குத் தயாராக உள்ளார்கள். ஆனால் இப்பகுதியிலுள்ள பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலை நேரங்களில் தொழில்களுக்கு அனுப்புவதும், பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலைமையும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இதனைவிடுத்து பாடசாலைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு அந்த பிஞ்சு வயதில் திருமணம் செய்து வைக்கின்ற துர்ப்பாக்கிய நிலமையும் இப்பகுதியில் காணப்பட்டு வருவதானது மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்த நிலைமைய இன்னும் தொடர விடாமல் பொற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரங்கேணிக் குளத்திலிருந்தும் அரச உத்தியோகஸ்த்தர்கள் உருவாக வேண்டும். அதற்கு தமது பிள்ளையின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு முயற்சி எடுக்கின்றார்களோ அதுபோல் பெற்றோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது மிகவும் பெறுமதியான கணிணி, பிறிண்டர், லெப்டொப், உள்ளிட்ட கற்றலை இலகுவாக்கும் சாதனப் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனை இந்த மாணவர்கள் அனுபவிக்க வேண்டும்.
இதற்கு உதவிய செஞ்சிலுவை அமைப்புக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவிக்கின்றார் மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் பொ.மங்களரூபன் மேற்படி கிராம மக்களின் வீடமைப்பு, மலசலகூடம், வீதி அபிவிருத்தி, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்து கொடுப்பதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது அங்குள்ள பொதுசன மாதாந்த உதவிப் பணம் பெறுபவர்களுக்கு அவர்களின் காலடிக்கே கொண்டு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாகரைப் பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.
பிரதேச செயலாளரின் கருத்து அப்பகுதி மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிப்பதாக இருந்தாலும் சாண் ஏற முழம் சறுக்குவது போன்றுதான் குஞ்சங்கற்குளம் மற்றும் மதுரங்கேணிக்குளம் ஆகிய கிராம மக்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது, அபிவிருத்தியின்பாலும், ஆதிவாசிகளின் அபிலாசைகளையும், ஆற்றுப்படுத்துவதற்கு யார் கைகொடுப்பார் என ஏங்கிநிற்கும் அம்மக்களுக்கு காலத்தின் தேவையறிந்து சேவை செய்ய வேண்டியது துறைசார்ந்தவர்களின் தலையாய கடமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆதிக்குடிகளும், பூர்வீகக் குடிகளுமாக வாழ்ந்துவரும், ஆதிவாசி மக்கள் மத்தியில் இளவயது திருமணம், சுகாதார நடைமுறைகள், உள்ளிட்ட பல விடையதானங்களில் விழிப்புணர்வுகள் தேவைஎன்பது உணர்த்தி நிற்கின்றது.
அதுபோல் அங்குள்ள வீதிக்கட்டமைப்புக்கள், வீடமைப்பு, மலசலகூட வசதிகள், போக்குவரத்து, வாழ்வாதார நலனோம்புத்திட்டங்கள் உள்ளிட்ட பல விடைங்களை துறைசார்ந்தவர்கள் மேம்படுத்திக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் உள்ளது.
எனவே ஆதிவாசி மக்களின் வாழ்வையும் வளம்பெறுவதற்கு வழிசமைக்க அனைவரும் முன்நிற்க வேண்டும் என்பதையே அந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



