மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மக்கள் பேரணி
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்ககோரி பரித்திச்சேனையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் மக்கள் பேரணியாக வந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கசிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பரித்திச்சேனை மங்கையர் கொத்தனி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு பேரணியையும் போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
இதன்போது, பரித்திச்சேனையிலிருந்து கவனயீர்ப்பு பேரணியானது ஆரம்பமாகி தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் வரையில் சென்றது. அங்குள்ள விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியிடம் பிரதேசத்தில் காணப்படும் சட்ட விரோத கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்க உதவுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மகஜர் ஒன்றும் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊர்வலமானது கொக்கட்டிச்சோலை-வவுணதீவு பிரதான வீதியூடாக வந்து வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பரித்திச்சேனையில் அதிகரித்துவரும் கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்க கோரியும் பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இவ்வாறான நிலைமைகளை தடுக்ககோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |