முல்லைத்தீவில் கனியவள மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கனியவள மணல் அகழ்விற்கான முன்னாயத்த ஆய்வு பணிகளுக்கு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருக்கும் கனிய வள மணலை அகழ்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (31.07.2024) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இரகசியமான முறையில் முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இருந்து தீர்த்த கரைவரை ஆய்வு பணியினை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு நடவடிக்கை
இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக கடலோர பாதுகாப்பு திணைக்களம், கனிய மணல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்களம், நீர் வள முகாமைத்துவத்தினர், புவிசரிதவியல் திணைக்களம் கரைதுரைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர், ஆகியோர் இணைந்து அவ்விடத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
கனிய மணல் திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் குறித்த நடவடிக்கைக்கு, துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஆய்வு பணி கைவிடப்பட்டு அவ்விடத்திலிருந்து சென்றிருந்தனர்.
இந்நிலையில், குறித்த திணைக்களம் உள்ளிட்ட குழுவினர் மீண்டும் பிறிதொரு இடத்தில் கனிய மணல் ஆய்வில் ஈடுபட சென்ற போது அங்கும் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, திணைக்களத்தினருடன் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இந்த ஆய்வு நடவடிக்கையை கைவிட்டு விட்டு அவ்விடத்திலிருந்து செல்வதாக கூறி ஆய்வு திணைக்களத்தினர் சென்றுள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |