நீதி அமைச்சருடனான மக்கள் நேரடி சந்திப்பு திடீர் இரத்து
ரணில் 2024 செயலணித் தலைவரினால் நாளை 23ஆம் திகதி ஒழுங்குபடுத்தப்பட்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களுடனான மக்கள் நேரடி சந்திப்பு அமைச்சரினால் இன்றைய தினம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அதிகாரத் துஸ்பிரயோகங்கள், அடக்குமுறைகள், நிர்வாக முறை மீறல்கள் தொடர்பில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளும் நீதி அமைச்சரை நேரடியாகச் சந்தித்து தெரியப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நாளை 23ம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மயிலத்தமடு மாதவணை விவகாரம்
திடீரென அதனை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் தரப்பில் இருந்து இன்று தலவல் வந்துள்ளது. மட்டக்களப்பின் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கும் மயிலத்தமடு மாதவணை விவகாரம் தொடர்பிலும் அமைச்சரை நேரடி விஜயத்தினூடாக அறியச் செய்து அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கோடும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் இன்று அவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதானது மக்கள் பிரச்சினைக்கான தீர்வு எம்மால் முன்வைக்கப்படக்கூடாது என்று நினைத்தவர்களுக்கு வெற்றியாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாரிய அழுத்தம் இந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
இவ்வாறானவர்களை மக்கள் தான் நன்கு இனங்கண்டு கொள்ள வேண்டும். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் அவர்களின்அழுத்தம் காரணமாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களின் மைலத்தமடு நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதனை சகலருக்கும் அறியத்தருகிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |