மயக்கமுற செய்து தங்கத்தை கொள்ளையிடும் நபர்கள் வெள்ளவத்தையில் கைது
வீதியில் செல்லும் நபர்களை ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த பானங்களை குடிக்க கொடுத்து, அவர்கள் மயங்கிய பின்னர், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வரும் குழு ஒன்றின் இரண்டு சந்தேக நபர்களை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் விடுதிகளில் தங்கி கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர்கள்
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மற்றும் பதுளை பிரதேசங்களை சேர்ந்த 63 மற்றும் 64 வயதான நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கொழும்பில் தற்காலிக விடுதிகளில் தங்கியிருந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூன்று பொலிஸ் பிரிவுகளில் தேடப்பட்டு வந்தவர்கள்
கடந்த சில மாதங்களாக கிடைத்து வந்த முறைப்பாடுகளுக்கு அமைய இவர்கள் வெள்ளவத்தை, நாராஹென்பிட்டி மற்றும் எடேரமுல்ல பொலிஸ் பிரிவுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது, வெள்ளவத்தை பிரதேசத்தில் கொள்ளையிட்டு விற்பதற்காக கொண்டு சென்ற 4 தங்க மோதிரங்கள், இரண்டு தங்கச்சங்கிலிகள், கையில் அணியும் தங்கச்சங்கிலி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.