ஹட்டனில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் நின்று ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் (Photos)
ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ள காத்திருந்த போதும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தில் வாழும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று மண்ணெண்ணெய் வரும் என்று எண்ணி காலை முதல் வரிசையில் நின்றிருந்தனர்.
பல மணித்தியாலங்களுக்குப் பின் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் இன்று மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தனர்.
இது குறித்த எண்ணை முகவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,
மண்ணெண்ணெய் எப்போது வரும், டீசல் எப்போது வரும் அல்லது பெட்ரோல் எப்போது வரும் என்று எங்களுக்கு முன்கூட்டி அறிவிப்பதில்லை. வரும் பொழுதான் எங்களுக்கு அறிவிக்கிறார்கள்.
அதனால் எங்களுக்கு உரிய நாளில் வாருங்கள் என்று மக்களுக்குத் தெரிவிக்க முடியாது. இன்று ஹட்டன் பகுதியில் மூன்று பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் உள்ளன.
மண்ணெண்ணெய் மூலம் லாபம் கிடையாது
அவற்றில் எதிலும் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. காரணம் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பதன் மூலம் லாபம் கிடையாது.
அதனால் தான் அவர்கள் அதனை செய்வதில்லை. இதனை நாங்கள் மக்கள் சேவையாக நினைத்தே செய்து வருகிறோம். மண்ணெண்ணெய் வழங்கும் போது நீண்ட நேரம் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அத்தோடு இதற்கு நாங்கள் இரண்டு பேரையாவது நிறுத்த வேண்டும். இவர்களுக்கு வழங்கும் சம்பளம் மற்றும் இதனால் பெட்ரோல், டீசல் வழங்க முடியாது. அதனால் ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றினை கருத்தில் கொள்ளும் போது இது ஒரு பாரிய நஷ்டமான காரியமாகவே காணப்படுகின்றது.
இதே நேரம் மக்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் மக்களுக்கு பொறிமுறை ஒன்றினை அமைத்துக் கொடுக்க முடியாது. இதன் காரணமாக மக்கள் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள். அரசாங்கம் தான் அதற்கு வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
இன்று மக்கள் நீண்ட நேரம் நின்றுவிட்டு எண்ணெய் இல்லை என்று தெரிந்ததும் போராட்டம் செய்து ஊழியர்களைத் தகாத வார்த்தைகளில் ஏசி முகநூலிலும் பல்வேறு பதிவுகளை இட்டு எம்மை மனவேதனைக்கு உள்ளாக்குகிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்தும் செய்தால் நாங்களும் கவலையுடனும் மண்ணெண்ணெய் விநியோகத்தினை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் எரிவாயு இல்லை, மண்ணெண்ணெய் இல்லை, நாங்கள் தற்போது மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்து வருகிறோம். எங்களுக்கு விறகு அடுப்பு வைப்பதற்குக் கூட இடமில்லை. மண்ணெண்ணெய்யும் இல்லை என்றால் நாங்கள் எப்படி சாப்பிடுவது?
காத்திருந்து பெறவேண்டிய நிர்ப்பந்தம்
எங்களது குழந்தைகளுக்கு எவ்வாறு உணவு சமைத்துக் கொடுப்பது? இன்றைய நிலையில் எப்போது எண்ணை வரும் என்று எவருக்கும் தெரியாத நிலையே காணப்படுகின்றது. இதனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் எண்ணெய்க்காகப் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியாது வீடு செல்கிறோம்.
ஒரு சிலர் மண்ணெண்ணெய் வரும் போது குடும்பத்திலுள்ள ஐந்து ஆறு பேர் நின்று தங்கள் தேவைக்கு அதிகமாகவும் சிலர் விற்பனை செய்வதற்காகவும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அதனை பெற முடியாதவர்கள் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றன.
ஆகவே அரசாங்கம் என்ற வகையில் கிராம சேவகர் ஊடாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ மின்சார பட்டியலோ அல்லது வாக்காளர் இடாப்பை பயன்படுத்தியோ எல்லோருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பொறிமுறையினை அமைத்து உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.
இது குறித்து அரச ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வது என்றால் இன்று தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றன. தொழிலுக்குச் சென்ற போது மண்ணெண்ணெய் வழங்கினால் வந்து வரிசையில் நின்றால் நிரப்பு நிலையத்தினை அண்மிக்கும் போது மண்ணெண்ணெய் முடிந்து விடுகிறது.
இதனால் சமையல் செய்வதில் பாரிய சிக்கல் நிலைகள் உள்ளன. இன்று பெட்ரோலுமில்லை தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றன. ஆகவே இதற்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுத்துச் சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தொழிலினை கூடச் செய்ய முடியாத நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.





துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! Manithan
