மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாம் என தடுக்கும் விவசாய அமைப்பு : எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்
தாம் ஆண்டாண்டு காலம் தமது மூதாதையர்களை அடக்கம் செய்து மயானமாக பேணிவரும் இடத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்ய முடியாது என விவசாய அமைப்பு ஒன்று தடுத்து வருவதனால் அப்பிரதேச மக்கள் வீதியில் இறங்கி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் - மண்முனை, தென் எருவில் பற்று பிரதேசத்தின் தேத்தாதீவு குடியிருப்பு எனும் கிராமத்திலுள்ள மக்கள் பன்நெடுங்காலமாக இருந்து அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் இறந்த உடல்களை அக்கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவுள்ள ஓர் இடத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்குறித்த இடத்தில் இனிமேல் இறந்த உடல்கள் அடக்கம் செய்ய முடியாது என அப்பகுதியிலுள்ள விவசாய அமைப்பு ஒன்று தம்மைத் தடுத்து வருவதாகத் அங்குள்ள மக்கள் தெரிவிக்கன்றனர்.
ஆண்டாண்டு காலம் பழமை வாய்ந்த தமது கிராமத்திலுள்ள மாயானத்தில் 50 இற்கும் மேற்பட்ட தமது மூதாதையர்களின் இறந்த உடல்கள் அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளன.
திடீரென விவசாய அமைப்பு இதனை தடுப்பதானது எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது.
இதனை சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தரவேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தாம் ஆண்டாண்டு காலம் தமது மூதாதையர்களை அடக்கம் செய்து மயானமாக பேணிவரும் குறித்த நிலப்பகுதியில் தற்போது மண் அகழப்பட்டுள்ளது.
இவ்விடத்தை விட்டால் இனிமேலும் எமது உறவுகள் மரணித்தால் நாம் எங்கே கொண்டு சென்று அடக்கம் செய்வது, கடற்கரைப் பகுதிக்குக் கொண்டு செல்வதென்றாலும், சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று(03) வீதிக்கு வந்து தமது எதிர்ப்பினையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தனின் (C.Chandrakanthan) கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் பணிப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் (J. Jayaraj) இன்று (03) உரிய இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கு எற்கனேவே உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலமையை அவதானித்து பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், உரிய மாயாணத்தை மேலும் கொண்டு செல்வதற்குத் தடுக்கும் அப்பகுதி விவசாய அமைப்பு, கமநல சேவைகள் திணக்களத்தினர், உள்ளிட்ட அனைவரிடமும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களின் நிலமையைத் தெழிவு படுத்தியதற்கிணங்க இந்தவாரமே
சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், உரிய விவசாய அமைப்பு, பொதுமக்கள் கிராம மக்கள், பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓர் கலந்துரையாடலை மேற்கொண்டு அதன்போது
உரிய தீர்மானம் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.





