இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள்: இந்திய துணை தூதர் (Photos)
இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவித்திட்டம் இன்று அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்திய மக்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவித்திட்டம்
இதன்போது யாழ்.மாவட்ட இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், பிரதேச செயலாளர் உட்பட இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் இரண்டு இலட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணம் கையளிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமான உதவியே. தமிழ்நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இன்னும் நிவாரணப்பொதிகள் வந்துகொண்டிருக்கின்றது. அரிசி மற்றும் பால்மா இதன்போது கையளித்துள்ளோம்.
யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்களுக்கு 17000 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வைத்திருந்தோம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குத் தேவையான மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களும் நேற்று வழங்கி வைத்திருந்தோம். இன்னும் மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் வந்துகொண்டிருக்கின்றது.
இலங்கைக்கு முதலீடு மற்றும் தொழில் வாய்ப்பு
இந்த நெருக்கடியிலிருந்து வெளியில் வருவதற்கு முன்னோக்கிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. இந்தியாவிலிருந்து முதலீடு மற்றும் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களைக் கொண்டு வரவும் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
மிக விரைவில் இதற்கான பலனை வட மாகாணத்தில் காண்போம். அத்துடன் தனிப்பட்ட முறையில் சில கடற்தொழிலாளர் சங்கத்திலிருந்து மண்ணெண்ணெய் கோரி கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
அதனை உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபரூடாக அல்லது வட மாகாண செயலாளர் ஊடாக தொகுத்து எடுத்து வருமாறு கோரியுள்ளோம். அவ்வாறு வந்தால் பரிசீலனை செய்யலாம்.
இதேவேளை இந்திய - இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சனை தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது, கடந்த ஒன்றரை மாதங்களாக இந்திய கடற்தொழிலாளர்களுக்கு கடற்தொழிலில் ஈடுபட தடை இருக்கின்றது. இந்தியாவில் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கப்பல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை பேச்சுவார்த்தையும் பல மட்டங்களில்
இடம்பெற்று வருகின்றது. அரசியல் ரீதியிலும் இடம்பெற்று வருகின்றது.
கச்சதீவை மீட்பதென்பது உத்தியோக பூர்வமாகவரும் விடயம் அல்ல. அவை எல்லாம்
பத்திரிகையில் வரும் விடயங்களாகவே இருக்கின்றது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.