ரணில் காலத்தில் ஆயிரம் ரூபா விலைக் குறைப்புடன் எரிவாயு சிலிண்டர்!
இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு காணும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் போது அரசியலமைப்பின் 19, 20 அல்லது 21வது திருத்தத்தை மக்கள் விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாறாக, மக்கள் வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஒரு பொதுவான போராட்டத்தின் போது சில அரசியல் கட்சிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்த முயற்சிப்பதற்காகவும் அவர் கடுமையாக சாடினார்.
மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்னும் சீராக வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அபேவர்தன தெரிவித்தார்.
ஒரு சிலிண்டரின் விலை 2,650 ரூபாவாக இருந்த போதிலும், முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க நான்கு வருடங்களுக்கு 1,650 ரூபாவிற்கு எரிவாயு சிலிண்டரை வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார்.
முன்னாள் பிரதமர் தனது பதவிக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிலையான விலையை உறுதி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.