தடுப்பூசி பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
திருகோணமலை-கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களாகத் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நிற்பதையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாகக் கிராமப்புற மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்குப் பயந்திருந்த போதிலும் தற்போது ஊசி போடுவதற்கு தங்களுடைய விருப்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று எப்படியாவது ஊசி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்தும் தடுப்பூசி வழங்காதவர்களுக்குத் தடுப்பூசி தங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில் அனைவருக்கும் அதனை வழங்க உள்ளதாகவும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த மூன்று நாட்களாக இரண்டு வைத்தியர்கள் உட்பட இரண்டு தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் பாரிய சிரமத்துடன் கடமையாற்றி வருவதாகவும், அதற்காகப் பிரதேசத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




