எரிபொருளை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: மூவர் கைது (Photos)
மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் குழப்பம் விளைவிக்க முயன்றதாக கூறி மூன்று பேர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பல மணிநேரம் காத்திருந்த மக்கள்
நேற்று நள்ளிரவு தொடக்கம் பார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் நின்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த யாரும் எந்த தகவலும் வழங்காத நிலையில் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் பெட்ரோலுக்காக காத்திருந்துள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாது எனவும் வேறு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வரிசையில் நின்ற மக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
நான்கு தினங்களுக்கு முன்னர் தாம் பணம் செலுத்தியதாகவும் இன்னும் எரிபொருள் வரவில்லையெனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிராந்திய பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திலிருந்து ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்களை கொண்டுசெல்வதை தடுத்து அப்பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
குறித்த எரிபொருள் நிலையத்தினரால் எந்த பணமும் செலுத்தப்படவில்லையெனவும் ஏனைய பகுதிகளில் பணம் செலுத்திய எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை அனுப்ப வழியேற்படுத்துமாறு பொலிஸார் கூறியநிலையில் மக்கள் அந்த பணத்தினை செலுத்துவதாகவும் இந்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் இல்லாது விட்டால் எரிபொருள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
இதன்போது கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் கலைக்கப்பட்டு எரிபொருள் வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. இதன்போது குறித்த பெட்ரோல் கொண்டுசெல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்த முற்பட்ட மக்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர்.
இதன்போது பெண்களும் பொலிஸாரினால் தள்ளப்பட்டு விரப்பட்டதுடன் சிலரின் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு பிராந்திய பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.