யாழில் வீதிகளில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்
யாழ்ப்பாணம் (Jaffna) - அராலி வீதியில் நாவாந்துறைக்கு அண்மித்த பகுதி, பொம்மைவெளி மற்றும் காக்கைதீவு ஆகிய பகுதிகளில் வீதியோரங்களில் காணப்படும் கழிவுப் பொருட்களினால் மக்கள் பெறும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளின் வீதிகளினூடாக செல்லும் மக்கள் கழிவுப் பொருட்களை இட்டுச் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த பகுதிகள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களது கோரிக்கை
இருப்பினும் யாழ். மாநகரசபையோ அல்லது சுகாதார பரிசோதகர்களோ அந்த பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அண்மைய நாட்களாக மழையுடனான காலநிலை காணப்படுகின்றமையினால் அங்கு காணப்படும் கொள்கலன்களிலும், பொலித்தீன் பைகளிலும் நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், பொது சுகாதார பரிசோதகர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்த பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையை வெகு விரைவில் முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |