கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாபமும் ரணிலுக்கு அடித்த அதிஷ்டமும்! இலங்கையில் திசை மாறிய காற்று
இலங்கை மக்கள், ஆய்வாளர்கள் மற்றும் சக அரசியல்வாதிகள் சற்று எதிர்பார்க்காத வகையில் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானது அவரது அசாத்திய சாதனை எனவும் அது “அதிஷ்டம்” எனவும் நாட்டு மக்கள் விபரிப்பதாக வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற ஆசனத்தை பிடிக்க முடியாதவர் நாட்டின் பலமிக்க ஜனாதிபதி
கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனது சொந்த நாடாளுமன்ற ஆசனத்தை வெல்ல முடியாத இலங்கையின் மூத்த அரசியல்வாதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்று இலங்கையின் பலமிக்க பதவியான ஜனாதிபதி பதவிக்கு வர முடிந்தது.
“ஜனாதிபதி பதவி என்பது ரணிலுக்கு எப்போதும் வெற்றி பெற முடியாத பதவியாக இருந்தது” என அவருக்கு நெருக்கமான, ஆனால் வேறு ஒரு கட்சியை சேர்ந்த அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 223 பேர் நேற்று ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வாக்களித்ததுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்ததன் மூலம் அவர் ஜனாதிபதியாக தெரிவானார்.
ரணிலை விட வெறுக்கப்படும் நபராக மாறிய கோட்டாபய
ரணில் விக்ரமசிங்கவை விட இலங்கையர்களால் மிகவும் வெறுக்கப்படும் ஒரே நபராக கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் உக்கிரமான எரிபொருள், மருந்து, உணவு தட்டுப்பாட்டுக்கு கோட்டாபயவின் தவறான முகாமைத்துவமே காரணம் என குற்றம் சுமத்திய போராட்டகாரர்களிடம் இருந்து தப்பிக்க அவர் கடந்த வாரம் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்.
ஒரு காலத்தில் அரசியலை “ குத்துச் சண்டை போன்ற இரத்த விளையாட்டு” என வர்ணித்த மற்றும் மரதன் போட்டியில் போன்று பலம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் பதவிக்கு வந்துள்ள 73 வயதான ரணில் விக்ரமசிங்க,கடினமான சவாலை எதிர்நோக்கி இருக்கின்றார்.
செல்வந்த பத்திரிகை உரிமையாளரின் மகனாக பிறந்த ரணில் விக்ரமசிங்க, பிரசித்தி பெற்ற கொழும்பு றோயல் கல்லூரியில் பயின்று, கொழும்பு சட்டக்கல்லூரி சட்டம் படித்த சட்டத்தரணியாவார்.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். 1993 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில், முதல் முறையாக பிரதமர் பதவிக்கு தெரிவானார்.
45 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்ரமசிங்க, அறிவாளியாகவும் திமிர்பிடித்தவர் எனவும் கூறப்படுகிறது. அவர் பணக்காரர் என்ற போதிலும் ஒப்பீட்டளவில் ஊழலற்றவர் என அறியப்படும் அரசியல்வாதி எனவும் அந்த வெளிநாட்டு ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் புவிசார் அரசியல் நட்புறவு, உலக சந்தைக்கு ஏற்ற பொருளாதார கொள்கைகள், தமிழ் பிரிவினைவாத போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை போன்றவற்றை முதன்மைப்படுத்தி செயற்பட்டுள்ளார்.
சந்தர்ப்பவாத அரசியல் ஆயுதம்
இந்த நிலையில்,“ரணிலின் அரசியல் ஆயுதம் சந்தர்ப்பவாதமாகும். அவர் சாதுரியமாக காத்திருப்பார். சரியான நேரம் வரும் போது பாய்ந்து வருவார்” என பெயரை குறிப்பிடவிரும்பாத கொழும்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக 2015 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக பிரசாரத்தில், ராஜபக்சவினரை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்காக, போட்டி அரசியல்வாதியான மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்டார்.
ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக தூண்டுதலை ஏற்படுத்தும் உரைகளை நிகழ்த்திய ரணில்
மேலும் இலங்கை இந்த ஆண்டு வங்குரோத்து அடைந்து விட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக தூண்டுதலை ஏற்படுத்தக்கூடிய உரைகளை நிகழ்த்தினார்.
எனினும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதும், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பியோடிய பின்னர், இரண்டு மாதங்களாக பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இரக்கமற்ற நடைமுறைவாதி
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனரஞ்சகமான ராஜபக்சவினரை போல் அல்ல, “இரக்கமற்ற நடைமுறைவாதி” என போராட்டகாரரான சமீர தெட்டுவகே தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டத்தில் முன்னிலை வகித்து செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுவது குறித்து கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை மறுசீரமைப்பு, தாராளமய அணுகுமுறை மற்றும் இலங்கை மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றுவது போன்றவற்றை ஏற்றுக்கொள்வதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் உதவியை கோருவது, சம்பளத்தை வழங்க பணத்தை அச்சிடும் திட்டம், இந்தியாவிடம் இருந்து சிறு தொகை உரத்தை பெற்றுக்கொள்வது என்பன இனிப்பு வழங்குவதை போன்றதே அன்றி கொள்கைககள் அல்ல எனவும் விஜேவர்தன கூறியுள்ளார்.
அதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் மற்றும் அவர்களின் தேவைகள் தொடர்பில் அனுதாபம் கொள்ள முடியாது, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொதுச் செலவு குறைப்புகளுக்கு செல்ல அழுத்தம் கொடுக்கக்கூடும் என பொருளாதார நிபுணரான அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளதாக அந்த ஆங்கில ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது.