கடலட்டை பண்ணை வழக்கில் மக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும்: நீதவான் உத்தரவு
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கடலட்டை பண்ணைக்கு அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
'கிளிநொச்சி கிராஞ்சியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதாக அங்கு வசிக்கும் மக்கள் அரச அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
பண்ணை நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை
ஆனால் அந்த முறைப்பாட்டின் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் கடலட்டை அமைப்பதை ஊக்குவிப்பதுபோல அரச அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்தமையால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கினை தொடுத்திருந்தார்கள்.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட பண்ணைகளை இடைநிறுத்துவதுடன், புதிதாக அமைக்கும் பணிகளை முன்னெடுக்காத வண்ணம் ஒரு கட்டளையை இயற்றுமாறும் ரிட்மனு ஊடாக கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.
அந்தவகையில் கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மனுவில் குறிப்பிடப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததுடன், நேற்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் சார்பாக அரச சட்டத்தரணி தோன்றாமையினால் அந்த வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.
சட்டமுறையற்ற வகையில் பண்ணை அமைப்பு
அத்துடன் அந்தபகுதியில் சட்டமுறையற்ற வகையில் பண்ணை அமைத்துள்ளமைக்கு மக்கள் ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர். பலபேருக்கு முறையற்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டிருக்கின்றது. அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அது வழங்கப்பட்டிருக்கின்றது.
அந்த பகுதியில் பண்ணை அமைப்பதற்கான சூழல் இல்லாமையுடன், அதற்காக கடல் பிராந்தியத்தையும் மறைத்து பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை முன்னெடுப்பவர்கள் பாதிக்கப்படும் வண்ணம் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அதற்கு அரச அதிகாரிகள் துணைபோயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். நேற்றையதினம் நீதிமன்றில் குறித்த அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
தாங்கள்
சரியான முறைப்படியே அதனை செய்துள்ளதாக நீதிபதிக்கு பதில் அளித்துள்ளனர்.
எனினும் மக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட
நீதவான். எதிர்வரும் ஐந்தாம் மாதத்திற்கு வழக்கினை தவணையிட்டுள்ளார்.‘ என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
