ஈரானியப் படைத் தளபதி அலி முகமது நைனியின் இறுதிச்சடங்கு: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) மூத்த செய்தித் தொடர்பாளரும், பிரிகேடியர் ஜெனரலுமான அலி முகமது நைனியின் (Ali Mohammad Naini) இறுதிச்சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றன.
பாரசீகப் புத்தாண்டு (Nowruz) மற்றும் ஈதுல் பித்ர் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நைனிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்கு
68 வயதான அலி முகமது நைனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய நள்ளிரவுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக IRGC உறுதிப்படுத்தியுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் படுகொலை செய்யப்படும் மிக உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரியும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதோடு, ஈரான் தனது உயர் அதிகாரிகளின் இழப்புகளுக்குப் பழிவாங்கக்கூடும் என்ற அச்சத்தையும் உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.