முல்லைத்தீவில் பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இன்மையால் மக்கள் ஏமாற்றம் (Photo)
புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று 6, 7, 8, 9 ஆகிய இலக்கங்களுக்கு இலத்திரனியல் அட்டை மூலம் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக அதிக நேரம் காத்திருந்துள்ள போதும் இன்று காலை 7.30 மணிக்கு பெட்ரோல் முடிவடைந்து விட்டாத அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய நாளின் இலக்கத்திற்கான வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் இன்மை
பின்னர் பொலிஸ் அதிகாரியின் தலையீட்டால் 100 மோட்டார் சைக்கிள்களுக்கு 1 லீட்டர் வீதம் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் முடிந்து விட்டதாக கூறி திருப்பியனுப்புவது மக்களை அலைக்களிக்கும் நடவடிக்கை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்கள்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் இடம்பெறுகின்றது.
அத்துடன் முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி சுகாதார துறை ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகித்து வருகிறது.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் கிடைக்காத ஒரு தொகுதியினருக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை இன்றைய நிலமையின் படி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு, மாங்குளம், முறிகண்டி, புதுக்குடியிருப்பு ஆகிய எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் இல்லாத நிலையில் அங்கு வரும் மக்கள் ஏமாற்றமடைவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.